சென்னை கொளத்தூரில் மாநகர பேருந்து – பைக் மோதியதில் இரு வாலிபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள கொளத்தூரில் வசிப்பவர் கோகுல்ராஜ் என்னும் 30 வயது இளைஞர். இவருடைய நெருங்கிய நண்பரான லோகேஷ் என்பவர் வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். லோகேஷ் வெல்டர் வேலை பார்த்து வருகிறார். கோகுல்ராஜுக்கு அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது.
நேற்று பணியில் சேர்ந்துள்ள கோகுல்ராஜ் பகல் சுமார் ஒரு மணிக்கு லோகேஷுடன் பைக்கில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அவர்கள் கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்துக் கொண்டிருந்த போது அவர்கள் பைக் செங்குன்றம் சென்றுக் கொண்டிருந்த மாநகர பேருந்து தடம் எண் 114 மீது மோதியது.
இருவரும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் லோகேஷ் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோகுல்ராஜை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதை தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு சென்ற முதல் நாளே விபத்தில் மரணம் அடைந்த கோகுல்ராஜின் உறவினர்களும் நண்பர்களும் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர்.