ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 ஆண்டுகால வரலாறு காணாத அதிவேக ‘ஜெபி’ புயல் வீசியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பல பகுதிகளை துவம்சம் செய்த இந்த புயலால் பல வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு பறந்து சென்று விழுந்தன.
பாலங்களின் மீது சென்ற வாகனங்களை தலைகுப்புற கவிழ்த்துப்போட்ட இந்த பெரும்புயல், ஓசாகா கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி இருந்த எண்ணெய் கப்பலையும் நிலைகுலையச் செய்தது.
அந்த கப்பல் நகர்ந்து சென்று பாலத்தின் அடிப்பக்கத்தில் மோதியதால் இசுமிஸானோ நகரில் இருந்து கன்சாய் நகர விமான நிலையத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் கடல்நீர் புகுந்து ஆறுபோல் காட்சி அளிக்கிறது.
தற்போது ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியை நோக்கி நகரும் புயலின் எதிரொலியாக பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
புயல் கடந்து செல்லும் பாதையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசாகா நகரில் உள்ள பிரபல படப்பிடிப்புகள் நடைபெறும் யூனிவர்சல் ஸ்டுடியோ, தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
நகோயா மற்றும் ஓசாகா நகரில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 800 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், புல்லட் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
வீரியத்துடன் நகர்ந்துவரும் புயலால் மரத்திலான வீடுகள் மற்றும் விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழக்கூடும் என்பதால் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்படும் என அஞ்சப்படுவதால் மக்கள் தங்களது உயிரை காத்துகொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், புயல் சார்ந்த விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.