நீல்கிரிஸ் டிரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நீல்கிரிஷ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கூத்தன்’.
அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு பெரிய திரையுலக பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
வெங்கி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மாட்சாமி ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, அர்ச்சணா, நிகிஷா பட்டேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், படத்தை வெற்றிப் பெற செய்வதற்காக டிக்கெட் விற்பனை முறையில் புதிய யுக்தியை கையாண்டு அதை மேடையிலேயே அறிமுகப்படுத்தினார். அதாவது, டிக்கெட்டை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யும் முறையை தயாரிப்பாளர் முருகன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் முருகன், “மிகப்பெரும் பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகர்களை பிரமாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர நினைத்து இந்தப்படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.
ஒரு புதிய ஐடியாவாக நானே என் நண்பர்கள் மூலமாகவும், என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்ய உள்ளேன். இதற்கு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டை கொண்டு நீங்கள் தியேட்டர் சென்றால் ஒன்பது நாட்களில் எந்த தியேட்டர் செல்கிறீர்களோ அந்த தியேட்டரில் இந்தப் பட டிக்கெட்டை தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதை ஆரம்பித்திருக்கிறேன்.
ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள்.ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன். இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். படத்தின் இசை விழாவிலே படத்தின் விற்பனை தொடங்கி விட்டது. இந்த முறை எல்லோராலும் இனி பின்பற்றப்படும்.” என்றார்.
தயாரிப்பாளரின் இந்த புதிய முயற்சியை கே.பாக்யராஜ் உள்ளிட்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் பாராட்டினார்கள்.