“பாசிச பா.ஜ.க” ஒழிக் எனத் தூத்துக்குடி மாணவி ஷோபியா குரல் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் ஷோபியாவின் சிம்கார்டு மற்றும் பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சி நடப்பதாக அவரின் தந்தை சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஷோபியா குரல் எழுப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நாடு முழுவதும் உள்ள சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தூத்துக்குடி, கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், சாமி. ஓய்வு பெற்ற செவிலியர் கண்காணிப்பாளர், மனோகரி. இவர்களின் மகள்தான், லூயிஸ் ஷோபியா.
தூத்துக்குடியில் உள்ள கான்வென்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், டெல்லியில் இளநிலை இயற்பியலும், ஜேர்மனியில் முதுநிலை இயற்பியலும், கனடாவில் முதுநிலை கணிதமும் முடித்தவர்.
தற்போது, கனடாவின் மான்ட்ரீயல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தற்போது பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பொலிசாரின் நெருக்கடி காரணம் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை என ஷோபியாவின் தந்தை சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் ஷோபியா உறுதியான மனநிலையில் இருக்கிறாள். உறவினர்களோ, ஷோபியாவின் கல்வி, எதிர்காலம் கருதி பயப்படுகிறார்கள்.
ஒரு கட்சியை எதிர்த்து கோஷம் எழுப்பியதற்காக 3 பிரிவுகளில் வழக்கு என்றால், பா.ஜ.க,வை விமர்சிக்கும் அனைவரின் மீதும்தான் வழக்குப் போட வேண்டும்.
என் மகள் பா.ஜ.க.வை எதிர்த்து கோஷமிட்டாள் என்பதைவிட, தமிழிசை இரண்டு முறை கேட்டும் மன்னிப்பு கேட்காததை ஈகோவாக எடுத்துக்கொண்டதுதான் இத்தனைக்கும் காரணம் என சாமி தெரிவித்துள்ளார்.