மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி இன்று 07.09.2018 அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாவுள்ளது. அத்துடன் பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
மேற்படி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசணத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத் தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத் திட்டம் அமையவுள்ளது.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பு முழுவதும் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.