மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடந்தது கொண்டிருக்கும் ஹர்த்தால் போராட்டத்தினை மீறி வீதிகளில் பயணித்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு செங்கலடி புல்லுமலையில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதற்கான தெழிற்சாலையை நிறுத்த கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்நிலையில் குறித்த ஹர்த்தாலை புறக்கணித்து வழமை போன்று இயங்கிய வாகனங்களை இலக்கு வைத்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் காரணமாக பொலனறுவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு சென்ற இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மொறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த 33 வயதுடைய நாகமணி மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த அமுதா(30) என்ற இரு பெண்களுமே காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாக்குதல்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் வீதிகளில் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தும் பல வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு கற்கள் வீசப்பட்டு மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு போக்குவரத்தை இளைஞர்கள் சிலர் முடக்கியுள்ளனர்.