கனடாவின் Ontario பகுதியில் கடத்தப்பட்ட ஒரு பெண், Winnipeg பகுதியில் பாலியல் தொழில் செய்வதற்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதை செய்யப்பட்ட விடயம் அவர் அந்த கும்பலிடமிருந்து தப்பியதால் வெளி வந்திருக்கிறது.
Andres Michael Pavao என்னும் மனிதன் Ontario பகுதியில் ஒரு பெண்ணைக் கடத்தி Winnipegக்கு கொண்டு போயிருக்கிறான்.
அங்கு நான்கு மாதங்கள் அவள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதோடு பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறாள்.
அவ்வப்போது ஷாக் கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அந்தப் பெண் அவளைக் கடத்திக் கொண்டுபோன நபர் இல்லாதபோது ஒரு ப்ரீஸரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அந்த நபர் வரும் வரை தான் உயிரோடு இருப்போமா என்னும் அச்சத்திலேயே அவர் பலமுறை தவித்திருக்கிறார்.
சவப்பெட்டிக்குள் இருந்தது போல் உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார் அந்தப் பெண். அவரது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தாக்கப்பட்டிருந்தது.
தனது வாடிக்கையாளரை சந்திக்கும் நேரம் மட்டுமே அந்தப் பெண் தனது அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார், ஆனாலும் பாலியல் உறவு கொள்ளும் நேரம் கூட அவர் மேற்பார்வையிடப்பட்டார்.
அப்படி ஒரு வாடிக்கையாளரை சந்திக்க செல்லும்போது தப்பிய அந்தப் பெண் பொலிசாரிடம் தஞ்சம் புகுந்தார். அவர் அனுபவித்த கொடுமைகளைக் கேட்ட பொலிசார் ஒருவர், தனது 25 வருட பொலிஸ் அனுபவத்தில் இப்படி ஒரு கோர சம்பவத்தைக் கேட்டதில்லை என்றார்.
அவரை கடத்திய Andres Michael Pavao என்னும் நபரைக் கைது செய்துள்ள பொலிசார் அவன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.
அந்த பெண்ணுக்கு ஷாக் கொடுத்து சித்திரவதை செய்தது, அடைத்து வைத்தது, அச்சுறுத்தியது, மூச்சுத்திணறச் செய்தது, பாலியல் தொழிலுக்காக அவரை விளம்பரப்படுத்தியது, அதினால் லாபம் அடைந்தது உட்பட 12 குற்றச்சாட்டுகள் அவன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு கடத்தப்படும் பெண்கள் உதவி கோருவதற்காக இலவச தொலைபேசி எண் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.