முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரால் அண்மையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம், இறுதியில் காற்று போன போராட்டமாக மாறிவிட்டது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஜனநாயக விரோத செயல்களில் ஈடுப்பட்டார். எனினும் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கினார்.
இருப்பினும் எதிர்க்கட்சிக்கு சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியவில்லை.
கூட்டு எதிரணியினர் ஐந்தாம் திகதி முன்னெடுத்த போராட்டத்தின் ஊடாக நாட்டை கைப்பற்றுவதாகவே கூறினர்.
எனினும் அன்று இரவு வரை மக்கள் பலத்தை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இறுதியில் காற்று போன போராட்டமாக மாறிவிட்டது“ என தெரிவித்துள்ளார்.