கனகராயன்குளம் பகுதியில் உள்ள தாவீது ஹோட்டல் இயங்கும் நிலம் தொடர்பாக முஸ்லிம் நபர் ஒருவருக்கும் காணி உரிமையாளருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதன் போது விசாரணைக்காக சென்ற கனகராயன்குளம் பொலிஸார் காணி உரிமையாளரின் வீட்டில் இருந்த பெண்கள் சிறுவர்களை கோரமாகத் தாக்கியுள்ளனர். இத் தாக்குதலில் வசந்தகுமார் – கிருபாகரன் வயது 16 மற்றும் வசந்தகுமார் – கிரியா வயது 13 ஆகிய சிறுவர்களேவவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த காணி உரிமையாளர்கள் 2 ஏக்கர் நிலப்பரப்பு வைத்திருந்துள்ளார். அதில் 1 ஏக்கர் நிலப்பரப்பை 2010 ம் ஆண்டு ஒரு முஸ்லிம் நபருக்கு 2 ஆண்டு கால குத்தகைக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை குத்தகை புதுப்பிக்கப்படும்.
குறித்த காணியின் குத்தகை ஒப்பந்தம் 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. அதன் காரணத்தினால் தமது காணியை விடுமாறு உரிமையாளர் எழுத்து மூலமான அறிவித்தல் ஒன்றை முஸ்லிம் நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் குறித்த கடை நடத்தும் நபர் சட்டத்திற்கு முரணாக அடாத்தாக குறித்த ஹோட்டலை நடத்தி வருகின்றார்.
இதனால் காணி உரிமையாளர் கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறையிட்டும் எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக காணி உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில், நாம் 2 ஏக்கரில் 1 ஏக்கரை குத்தகைக்கும் மற்றைய 1 ஏக்கரில் எமது வாழ்வாதாரத்திற்காக தென்னை மரங்கள் வைத்துள்ளோம்.
இந்நிலையிலேயே நாம் தென்னைகளுக்கு நீர் இறைக்கச் சென்ற போது கடை உரிமையாளர் வேண்டுமென்றே எம்முடன் சண்டைக்கு வந்தார். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸாரும் வந்து பார்த்துச் சென்றனர். பார்த்து விட்டு எதுவும் கூறாது சென்று விட்டனர். மீண்டும் மாலையில் பொலிஸார் கடைக்குள் வந்திருந்துள்ளனர்.
அச்சமயம் கடை உரிமையாளர் சண்டை செய்வது போன்று எம்மை அழைத்தார். அங்கு சென்ற என் கணவனை கனகராயன் குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியான பரிசோதகர் பலமாகத் தாக்கினார். அதனை அவதானித்த நான் எனது கணவனை காப்பாற்ற ஒடிச் சென்றவேளை நான் ஒரு பெண் என்று கூடப் பார்க்காது என்னையும் பலமாகத் தாக்கியதோடு எனது சட்டையை பிடித்து இழுத்ததனால் இரு பக்கங்களும் கிழிந்த நிலையில் நடு வீதியில் நின்றேன் எனவும் தெரிவித்தார்.
என்னைக் காப்பாற்ற வந்த மகனின் தொண்டையை நெரித்ததால் தெண்டை வீங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் எனது 13 வயது மகளுக்கும் ஈவிரக்கமின்றி கோரத்தனமாக வயிற்றுப் பகுதியில் குத்தியதால் அவளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள் அத்தோடு இவ்வளவு காலமும் எனது கணவன் முன்னாள் போராளி என்பதை கூறி தொடர்ந்தும் அச்சுறுத்தியதாலேயே பொறுமை காத்தோம். என்ன செய்வது கடை உரிடையாளரைப்போல் பணத்தை வாரியிறைக்குமளவிற்கு நாம் வசதி படைத்தவர்கள் இல்லையே எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.