யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா (Street Festival) ஒன்று நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.
3000இற்கும் மேற்பட்ட தமிழர்களும் யேர்மனிய மற்றும் பிறநாட்டவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன என்றார்.
மேலும் மேடை அமைக்கப்பட்டு, கோலாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனங்கள், குத்தாட்டம், பரதம், மேற்கத்திய நடனங்கள், இசைப்பாடல்கள் என்று பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.
மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள Rheinische Str இல் இந்தத் தெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.