விமான நிறுவனம் ஒன்றின் பைலட்கள் மற்றும் ஊழியர்கள் நாளை ஜேர்மனியில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதை அடுத்து விமான சேவை மோசமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகளில் விமான சேவையை மேற்கொண்டுள்ள பிரபல விமான நிறுவனமான Ryanair நிறுவனத்தின் ஜேர்மனி பைலட்களும் ஊழியர்களும் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஊதியமும் பணிச் சூழலும் மேம்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பைலட்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கைகளை பல மாதங்களாக முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தின்போதும் இது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டபோதும் முடிவுகள் எதுவும் எடுகப்படவில்லை என சங்கம் சார்பாக பேச்சு வார்த்தைகள் நடத்தும் Ingolf Schumacher தெரிவித்தார்.
24 மணி நேரம் மேற்கொள்ளப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படும் இந்த வேலை நிறுத்தத்தில் 400 பைலட்கள் மற்றும் இணை பைலட்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக 1000 விமான ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த முறை ஐந்து ஐரோப்பிய நாடுகளில் நடந்த வேலை நிறுத்தத்தால் 55,000 பயணிகள் பாதிக்கப்பட்டதோடு பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில், இம்முறையும் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.