புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.
இன்றைய தினம் இந்த சம்பவம் நடந்தது.
யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரன் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதனை அவதானித்த நீதிமன்ற பொலிசார், யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.
இன்று மதியமளவில் யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று அந்த இளம்பெண் சட்டத்தரணியை கைது செய்ய முயற்சித்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
உடனடியாக சட்டத்தரணிகள் அந்த சம்பவத்தில் தலையிட்டனர். சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் தலையிட்டு, அவரை கைது செய்ய முடியாதென பொலிசாருடன் வாதாடினர். எனினும், அவரை பொலிஸ் நிலையம் அழைத்து செல்ல வேண்டுமென பொலிசார் விடாப்பிடியாக நின்றனர்.
இதையடுத்து, சட்டத்தரணிகளுடன் அவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என வடக்கு பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.