கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிவந்த லொறி ஒன்றில் சிக்குண்டு லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று வியாழகிழமை அதிகாலை 03 மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த லொறியின் சாரதியும் உதவியாளரும் அதிகாலை இரண்டு மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இளைப்பாறி கொண்டிருந்ததுடன்,லொறியின் நடத்துனர் லொறியின் கீழ் இளைப்பாறி கொண்டு இருந்துள்ளார்.
அதிகாலை 03 மணியளவில் சாரதி நுவரெலியா நோக்கி செல்வதற்கு ஆயத்தமாகி லொறியை இயக்க முற்பட்ட போது கீழே இளைப்பாறிக்கொண்டிருந்த உதவியாளர் மீது லொறி ஏறியுள்ளது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே லொறியின் உதவியாளர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நுவரெலயா ஹவெளி பகுதியை சேர்ந்த 45வயதுடைய தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வியாழக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.