பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோயிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் ஊடாகத் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் இடம்பெற்றுள்ளன. சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.
அனைத்துவிதமான அநீதிகள் மற்றும் இனவாதங்களுக்கு எதிரான பன்னாட்டு இயக்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 39ஆவது கூட்டத் தொடரில் நேற்று உரையாற்றிய அந்த அமைப்பின் பேச்சாளர் அன்டோனி கிர்பட் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அதன் பரிந்துரைகளையும் வரவேற்கின்றோம். இலங்கையில் சிறுபான்மை மக்களின் சுதந்திரம் இழப்பு மற்றும் அநீதிகள் தொடர்பில் ஆராயுமாறு நாம் ஐ.நா. செயற்குழுவை வலியுறுத்துகின்றோம்.
பயங்கரவாதத் தடைச்சட்டமானது இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோயிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் ஊடாகத் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் இடம்பெற்றுள்ளன. சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன. சட்டத்தரணி இன்றி பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகின்றது. இது அச்சுறுத்தலையும் சித்திரவதையும் அதிகரிக்கின்றது. அதுமட்டுமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றும் செயற்பாடு தேங்கிக்கிடக்கின்றமை தொடர்பாக நாம் கவலையடைகின்றோம். பொறுப்புக்கூறல் மற்றும் அநீதிகளை தடுப்பதற்காக சட்டமறுசீரமைப்பை நாங்கள் வலியுறுத்துகின்றோம். சித்திரவதைகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகள் நடத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்ற கைதுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்குமாறு நாம் கோருகின்றோம்.
மரணதண்டனை விவகாரம் தொடர்பில் இலங்கை அரச தலைவரின் அண்மைய அறிவித்தல் குறித்து நாம் கரிசனை செலுத்தியுள்ளோம். நாம் இந்த விடயத்தில் ஜெனிவா தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு மனித உரிமைகளை மதிக்குமாறு அரசைக் கோருகின்றோம் – என்றார்.