ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பிய முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு பிரசாரத்துக்கு வந்த போது குண்டுவெடித்ததில் காவல்துறை அதிகாரிகளும் பலியாகினர்.
இந்த சம்பவத்தின் போது ராஜீவ் காந்தி அருகே பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. அனுசுயா டெய்சி படுகாயம் அடைந்து உயிர் தப்பினார்.
அவர் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அனுசுயா டெய்ஸி தற்போது தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவர், சம்பவம் நடந்த அன்று ராஜீவ் காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் நான் இருந்தேன்.
இதனால் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தேன். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ என்று கூறினார். நான் புன்னகைத்தேன்.
அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது.
அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை.
முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன.
மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.
தற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது.
இவர்களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்ல முடியுமா? ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்’, என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்? தற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம்.
ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்கு யாருமே பதில் சொல்லிவிட முடியாது.
இப்போது நான் அரசு பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றார் அனுசுயா டெய்ஸி.