மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கொலை வழக்கு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜாஸ்கரன் என்ற 40 வயது நபர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு ஜாஸ்கரன் மற்றும் மற்ற குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜாஸ்கரன் பல்வேறு குழுக்களுடன் இணைந்து 14 கொலை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஜாஸ்கரன் என்பவரின் உண்மையான பெயர் ஆதேஷ் காம்ரா என்பதும், அவர் சொந்தமாக தையல் கடை ஒன்று நடத்தி வருவதும் தெரியவந்தது.
அதன்பேரில் கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சிறைக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவாளி ஆதேஷ், தான் 33 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தில், என்னுடைய அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. சிறுவயதில் இருந்தே அவர் என்னிடம் பாசம் காட்டியதில்லை. வீட்டில் அதிகமான விதிகளை பயன்படுத்துவார்.என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே என்னை கடுமையாக தாக்கி வளர்த்து வந்தார். எனக்கு இந்த கொலை செய்யும் எண்ணம் எப்பொழுது வந்தது என்றே தெரியவில்லை.
2005 முதல் 2006 வரை லாரிகளை திருடி மட்டுமே விற்று வந்தேன். அதனால் பொலிஸார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் தான் பொலிஸார் அடையாளம் கண்டுபிடிக்கலாம் இருப்பதற்கும் தடையங்களை அழிக்க முயற்சி செய்தேன்.
அதன்படி 2007 முதல் 2018 வரை அதிகமான லாரிகளை திருடி 2 முதல் 3 லட்சம் வரை விற்றேன். இதற்காக சாலைகளில் செல்லும் அதிகமான லாரி ஓட்டுனர்களை நண்பர்களாக பிடித்தேன். அவர்களுடன் சாலை ஓரத்தில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடுவேன்.
அப்படி சாப்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் உணவில் மயக்க மருந்தினை கலந்து விடுவேன். பின்னர் அவர்கள் மயங்கியதும், காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு லாரியை ஒட்டி செல்வேன்.
அங்கு அவர்களை கொலை செய்து புதைத்து விடுவேன். இதுபோன்று மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 33 பேரை கொலை செய்துள்ளேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.