அதிமுகவில் கலை, வர்த்தகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு மேலும் 5 புதிய அமைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக மூன்றாக உடைந்து அதன் பிறகு இரு அணிகள் மட்டும் இணைந்து அதிமுக வின் சின்னம் மற்றும் தலைமை அலுவலகத்தை கைப்பற்றின.
தற்போது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கினைப்பாளராக உள்ளார். அதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
அந்த அறிவிப்பில், “அதிமுகவில் ஏற்கனவே உள்ள அமைப்புச் செயலாளர்களுடன் புதிதாக அமைப்புச் செயலர்களாக முன்னாள் அமைச்சர் ப.மோகன், சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.சின்னத்துரை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி என்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயப் பிரிவுத் தலைவராக தருமபுரி மாவட்ட அம்மா பேரவை முன்னாள் செயலர் டி.ஆர்.அன்பழகனும், செயலராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக அணிக்குத் தலைவராக சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், கலைப் பிரிவுத் தலைவராக திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலைப் பிரிவுச் செயலராக திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும், செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா பெரியசாமி, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.