ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு அவரின் தாய் மகேஷ்வரி இலங்கையில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது.
விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானம் விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் அனுப்பிவைத்துள்ளார்.
இதனிடையே சிறையில் இருக்கும் சாந்தனின் தாயார் மகேஷ்வரி இலங்கையில் இருந்து இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் மற்றும் சட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் 1991-ம் ஆண்டுக்கு பிறகு இன்று வரை தனது மகனை பார்க்கவில்லை என ஏக்கத்தோடு கூறியுள்ளார்.
தன்னுடைய கணவர் உயிரிழந்த நிலையில், தன் ஒற்றைக்கண் பார்வையும் குறைந்துவிட்டதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு தாயின் வலியை உணர்ந்து, தன்னுடைய இறுதி காலத்திலாவது தன் குழந்தையை தன்னருகில் தந்து உதவுமாறு மன்றாடி கேட்டு கொள்வதாக உருக்கமாக மகேஷ்வரி கடிதம் எழுதியுள்ளார்.