இலங்கை பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளில் தொழில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை தடுத்து நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட கருமப்பீடம் ஒன்றை விமான நிலையத்தில் திறக்க வேண்டும் என அனுமதிப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
நாட்டில் இருந்து வெளியேறும் மற்றும் உள் நுழையும் நபர்களை பரிசோதிக்கும் அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இருப்பதால், சந்தேகத்திற்குரிய நபர்களை பரிசோதித்து, அவர்கள் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாட்டுக்கு தொழில் புரிய செல்ல உள்ளனர் என்று உறுதியானால், அவர்களை திருப்பி அனுப்ப முடியும் எனவும் முகவர்களின் சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.ஹசன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் செல்லும் நபர்களை விரிவாக பரிசோதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இல்லை என்பதால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த தொழிற்துறை தொடர்ந்தும் சிறப்பான நிலைமையில் வைத்திருக்க வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று செல்ல வேண்டுமாயின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது