இந்திய வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா எந்த சிக்கலுமின்றி தப்பிச்செல்லுவதற்கு உதவியதே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்.
இது தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சிபிஐ வெளியிட்ட ‘நோட்டீஸில்’ விமான நிலையத்தில் மல்லையாவை பார்த்தால் கைது செய்ய வேண்டும் என குறிப்பிடுவதற்கு பதில் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிபிஐயும் இதை ஒப்புக் கொண்டுள்ளது.
மல்லையா வெளிநாட்டுக்கு தப்பியோட வாய்ப்பில்லை என நம்பியதாக, சிபிஐ இதற்கு காரணம் கூறுகிறது. வழக்குகள் குறித்து பிரதமருக்கு தகவல் சொல்ல வேண்டிய நிலையில் சிபிஐ உள்ளது. முக்கியமான வழக்குகளில், பிரதமர் மோடியின் ஒப்புதல் இல்லாமல் மல்லையாவை தேடுவது தொடர்பான நோட்டீஸில் மாற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி பங்கு உள்ளது என தெரிவித்துள்ளார் ராகுல்.
முன்னதாக, பிரிட்டனுக்கு தப்பிச்செல்லும் முன்னர் மத்திய நிதியமைச்சர் ஜெட்லீயுடன் ஆலோசித்ததாக மல்லையா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது