மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது.
அப்படியொரு கதைதான் இந்த கதையும்.
மட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங்களும், ஆறும் அழிவடையும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கெதிராக அவர்கள் எழுப்பும் குரலை யாரும் கவனிக்கவில்லையென்பதே பெரும் துயரமானது. இது குறித்து தமிழ்பக்கம் விசேட கவனம் செலுத்தியது. நமது செய்தியாளர்கள் அங்கு சென்று திரட்டிய தகவல்களின் தொகுப்பே இது.
செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி பாலாமடு கண்டம். முற்றிலும் விவசாய நிலங்கள். மாவடி ஓடை ஆற்றை நம்பிய பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களின் ஒரு பகுதியே பாலாமடு வடக்கு கண்டம். சுமார் 550 ஏக்கர் விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதி.
மட்டக்களப்பில் கொடிகட்டி பறக்கும் மண் வியாபாரிகளின் கண், மாவடி ஓடை ஆற்றிலும் விழுந்து விட்டது. விளைவு- விவசாயிகளும், விவசாய நிலங்களும் அபாய கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளனர்.
மாவடி ஓடை ஆற்றில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. மண் வியாபாரிகளின் வேகத்தில், ஆறு விரைவில் குளமாகி விடும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
ஆற்றுக்குள் அளவு கணக்கில்லாமல் மண் தோண்டப்படுவதால் ஆற்றின் அகலம் அதிகரிப்பதுடன், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட தொடங்கி விட்டது. ஆற்றின் ஓரமாக வளர்ந்து, ஆற்றின் கரைகளை பாதுகாத்து வந்த நூற்றாண்டு வயதான மரங்கள் அடியோடு சாய்க்கப்படுகின்றன. வாகனம் நிறைய மண், பொக்கட் நிறைய பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இயங்கும் மண் வியாபாரிகளிற்கு இயற்கையின் அழிவு ஏற்படுத்தும் இயல்பு நிலை மாற்றங்களில் அக்கறையிருப்பதில்லை. ஆற்றின் கரைகளில் மரங்கள் விழுவதையடுத்து, கரைகளில் உள்ள விவசாய நிலங்களையும் ஆறு அரிக்க ஆரம்பித்துள்ளது. இதனாலேயே பல ஏக்கர் நிலங்கள் காணாமல் போய் விட்டது.
இந்த பகுதியில் மண் அள்ள முறையான அனுமதி பெறாமல், சட்டவிரோத மண் வியாபாரிகளே அண் அள்ளுகிறார்கள். ஆனால், அதை சட்டபூர்வமாக செய்வதை போல, வேறிடத்தில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
முந்தன்குமாரவெளி ஆற்றில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்தே இந்த பகுதியில் மண் அள்ளப்படுகிறது. ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உள்ளடங்கியது முந்தன் குமாரவெளி. அங்கு மண் அள்ள ஈரளக்குளம் கிராமசேவகர் அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி பத்திரத்தை வைத்தே, மாவடி ஓடை ஆற்றில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பாலமடு கிராமசேவகரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.
எனினும், பிரதேசசெயலகத்தின் அனுமதி தமக்கு உள்ளதாக மண் வியாபாரிகள் உள்ளூர்வாசிகளை மிரட்டி வைத்துள்ளனர். சட்டவிரோத மண் வியாபாரிகள் தொடர்பாக பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக முறையிட்டும், உள்ளூர் விவசாயிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத மண் அகழ்வை கேள்வி கேட்டால், மண் அள்ளும் சவளுடன் தாக்க வருகிறார்கள் என விவசாயிகள் மிரண்டு போயுள்ளனர்.
வேறு எங்கேயே மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து, விவசாய நிலங்களின் நடுவில் மண் அள்ளுகிறார்கள்- அதுவும் பகிரங்கமாக அள்ளுகிறார்கள்… கேள்வி கேட்க வேண்டிய பிரதேச செயலகம் அந்த பக்கமே திரும்பி பார்க்காமல் இருக்கிறது…. சட்டவிரோத மண் தாதாக்கள் பற்றி முறையிட பிரதேச செயலகத்திற்கு சென்றால், அதிகாரிகள் ஏறிப்பாய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
இந்த விவகாரத்தில் ஏதோ “சம்திங்“ இருக்கிறது என்பதுதானே பொருள்!
ஆற்றில் இரவு நேரங்களில் மண்ணை அள்ளி அருகிலுள்ள நிலங்களில் குவித்து வைக்கிறார்கள். பகலில் வாகனங்களில் அந்த மண்ணை ஏற்றுகிறார்கள். ஆற்று மண் அனேகமாக விவசாய நிலங்களிலேயே குவித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களான களி மண் தரைகளின் மேல், மணல் படை உருவாகி, விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. விவசாய நிலங்களை ஊடறுத்து மண் வியாபாரிகளின் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இதுதவிர, ஆற்றோரமாக மண் வியாபாரிகள் ஒரு பாதையை தமது வாகன பயன்பாட்டிற்கு பாவிக்கிறார்கள். அது தனக்குரிய காணியென விவசாயியொருவர் உரிமை கோருகிறார். இதற்கான ஆவணங்களையும் அவர் வைத்திருக்கிறார். அதுதவிர, நீர்ப்பாசன பொறியியலாளர், கமநலசேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரும் அது தனிநபரின் காணி என்பதை உறுதிசெய்துள்ளனர்.
ஆனால்- அந்த பாதை பொதுப்பயன்பாட்டிற்கான பாதை, அதை யாரும் உரிமைகோர அனுமதிக்க வேண்டாமென பிரதேசசெயலாளர் கையெழுத்திட்டு கடிதமொன்றை பொலிசாருக்கு வழங்கியுள்ளார். இது கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புடைய விவகாரம். அதன் உத்தியோகத்தர்களே, தனியார் காணியென உறுதிசெய்து கடிதம் வழங்கியிருக்கின்ற போது, பிரதேச செயலாளர் ஏன் அப்படியொரு கடிதம் அனுப்பினார்?
அவர் மண் தாதாக்களிற்கு சார்பாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் இது ஏற்படுத்தியுள்ளது.
சட்டமும், நிர்வாகமும் மக்களின் பக்கமே நிற்க வேண்டும். ஆனால் இங்கு அது மண் வியாபாரிகளின் பக்கம் நிற்பதாக சிந்திக்க வேண்டிய சம்பவங்கள் நடப்பதாக விவசாயிகள் விசனித்து போயிருக்கிறார்கள்.
சட்டவிரோத மண் அகழ்வால் யானை வேலிகளும் அழிவடைய ஆரம்பித்துள்ளன. இதனால் மீண்டும் அங்கு யானை- மனிதன் மோதல் உருவாகும் அபாயம் எழுந்துள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வால் அந்த பகுதியின் விவசாயமே அழிவடையும் இன்னொரு ஆபத்தும் உள்ளது. ஆற்றில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், அதில் நீர் தேங்கி விடுகிறது. உறுகாமம் குளத்திற்கு நீர் செல்வது இந்த ஆற்றின் மூலமே. பள்ளங்களில் நீர் தேங்கி விடுவதால் உறுகாமம் குளத்திற்கு போதிய நீர் செல்வதில்லை. குளத்திற்கு செல்லும் நீரில் கிட்டத்தட்ட அரைவாசி நீர் சட்டவிரோத மண் அகழ்வால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. உறுகாமம் குளத்தின் கீழ் கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பொழுதே அவற்றில் முழுமையாக விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வால் மாவடி ஓடை ஆற்று பாலமும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. பாலம் உடைந்தால், அந்த பகுதிக்கான ஒட்டுமொத்த விவசாயமும் அழிவடையும்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வரை விவசாயிகள் முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதேச செயலகத்தில் பல முறைப்பாடுகளை பதிவு செய்திருக்கிறார்கள். மண் அகழ்வை தடுத்து நிறுத்துவதாக பிரதேச செயலாளர் பலமுறை உறுதி வழங்கிய போதும், சட்டவிரோத மண் அகழ்வு நிற்கவேயில்லை. பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்த போது, இனி மண் அகழ்வு நடக்காதென இரண்டு வாரங்களின் முன்னர் பிரதேச செயலாளர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், ஆற்றில் மண் அள்ளி விவசாய நிலங்களில் குவிக்கும் நடவடிக்கை நிற்கவேயில்லை. இரண்டு நாட்களின் முன்னர், அதிகாரிகளே அந்த இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு, அங்கு மண் அள்ளும் நடவடிக்கைக்கு சட்டபூர்வ அனுமதியளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
சட்டவிரோத மண் வியாபாரத்தால் தமது விவசாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை சுலபமாக எதிர்கொள்ள ஒரே வழி- அங்கு சட்டவிரோதமாக மண் அள்ளுபவர்களிற்கு சட்டபூர்வ அனுமதியளிப்பது. அதாவது திருடனிற்கு தேசப்பற்றாளர் வேசம் அணிவிக்க பிரதேசசெயலகம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தனது பிரதேச எல்லைக்குள் உள்ள பாலாமடு வடக்கு கண்டத்தில் விவசாயத்தை நம்பியுள்ள 300 இற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கை, இந்த விடயத்தில் பிரதேசசெயலாளர் எடுக்கப் போகும் முடிவிலும் நடவடிக்கையிலுமே தங்கியுள்ளது.