இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு இந்தியா பேருதவிகளை வழங்கியுள்ளதாக முன்னாள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள நிலையில் அதற்கு அன்றைய மத்திய மாநில அரசாங்கத்தில் இருந்தவர்கள் என்ன பதில் சொல்லப்போகின்றனர் என்று தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்று தமிழ் நாட்டை ஆண்ட கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸையுமே இதற்கான விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லியில் வைத்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவியளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழ் நாடு பொன்னேரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பன்னீர்ச் செல்வம், மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றுக்கு காங்கிரஸும் திமுகவும் என்ன பதில் சொல்லப்போகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.