தமிழகத்தில் காதலி திருமணம் செய்யும் படி வற்புறுத்தியதால், அவரை காதலன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட அவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவரது உடலை மீட்ட பொலிசார் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் அந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவரின் பெயர் பேபி(21) எனவும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தத்தின் மகள் என்பதும் தெரியவந்தது.
பேபி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
அவரின் மரணத்தின் பொலிசாருக்கு சந்தேகம் இருந்ததால், அந்த பெண்ணிடம் பழகி வந்தவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது கரூர்- வாங்கல்- மோகனூர் வழியாக இயக்கப்படும் ஒரு தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றிய நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே மேலப்பட்டியை சேர்ந்த அன்பரசு(22) என்பவரை காதலித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பொலிசார் அன்பரசிடம் நடத்திய கிடுக்கி பிடி விசாரணையில், நானும் பேபியும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்தோம்.
சம்பவ தினத்தன்று வேலை முடிந்ததும் பேபியும், நானும் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில் பேபி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார். நான் தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினேன்.
ஆனால் ஆத்திரமடைந்த பேபி இதைப் பற்றி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால், கீழே கிடந்த கல்லை எடுத்து பேபியை பலமாக தாக்கினேன்.
இதில் கீழே விழுந்த பேபி மயக்கமடைந்தார். பின்னர் துப்பட்டாவால் பேபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு ஓடிவிட்டதாக அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.