ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹமத் ஷா அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. யுனைடெட் அரபு எமிரேட்சில் இலங்கை அணி பெறும் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றியதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்