இசை நிகழ்ச்சிகளில் தன் பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அதனை ஏற்று இளையராஜாவின் பாடல்களை பாடுவதை நிறுத்தியிருந்தார் எஸ்.பி.பி.
ஹைதராபாத்தில் பேட்டி அளித்த எஸ்.பி.பி,
இளையராஜாவின் பாடல்களை பாடக் கூடாது என அவர் கூறினாலும் நான் பாடுவேன், பாடிக் கொண்டே தான் இருப்பேன். அவர் என் மகன் நடத்திய நிறுவனத்திற்கு தான் நோட்டீஸ் அனுப்பினாரே தவிர என் பாடல்களை பாடக் கூடாது என்று எனக்கு நேரடியாக எந்த தடை விதிக்கவில்லை.எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது தான் என் பாடல்களை யார் பாடினாலும் ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறி அவர் நோட்டீஸ் அனுப்பினார்.
இளையராஜா ஏன் அப்படி செய்தார் என்பது எனக்கு இன்னமும் குழப்பமே. அவர் நோட்டீஸ் அனுப்பி 1 ஆண்டு காலம் அவரின் பாடல்களை நான் பாடவில்லை. அவர் இசையில் தான் நான் அதிக அளவில் பாடியுள்ளேன். அதனால் அந்த பாடல்களில் எனக்கும் பங்கு உண்டு.
இளையராஜாவின் பாடல்கள் எனக்கு மிக பிடித்தமானவை. தொடர்ந்தும் பாடத் தான் செய்வேன். நிறுத்த மாட்டேன். நோட்டீஸ் அனுப்பியதால் அவர் மீதான மரியாதை கொஞ்சமும் குறையாது. அவரின் காலை தொட்டு கும்பிட நான் எப்போதும் தயார் என்றார் எஸ்.பி. பி.