1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது அவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்க். ஸ்மிதாவாக இருந்த அவர் அதன்பிறகு சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.
வண்டிச்சக்கரம் படத்தில் நடிப்பதற்கு முன் ஸ்மிதா நடித்த, ‘ராக தாளங்கள்’ படம் தற்போது திரைக்கு வரவிருக்கிறது.
ஆம் ஸ்மிதா நடித்த இந்த படம் 39 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.
இப்படம் குறித்து அப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான திருப்பதி ராஜா கூறும்போது,’ வண்டிச்சக்கரம் படத்துக்கு முன்னதாக ஸ்மிதா என் படத்தில்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவருக்கு சம்பளமாக 6 ஆயிரமும், முன்பணமாக 1800 ரூபாயும் கொடுத்திருந்தேன். அதற்கான அக்ரிமென்ட்டை நான் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். வீணையின் நாதங்கள், தங்க தாமரை என இரண்டு படங்களை அவரை வைத்து இயக்கினேன். ஆனால் சாதியை பின்னணியாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டிருந்ததால் அப்போது அதை வெளியிட முடியவில்லை.
அந்த 2 படங்களையும் ஒன்றிணைத்து ராக தாளங்கள் என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். இதில் ஸ்மிதா கதாபாத்திரத்தின் பெயர் அபிராமி. இப்படத்துக்கு பாலாஜி இசை அமைத்திருக்கிறார். நாகராஜ், ரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது’ என்றார்.