அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சென்று பார்வையிட்டிருந்தார்.
அவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் சிறை கைதிகளை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த விடயத்தை ஜனாபதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
அவரின் வாக்குறுதியை நம்பி தமக்கு சாதகமான பதில்வரும் என்ற நம்பிக்கையுடன் அரசியல் இன்று ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.