2006 யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதி. கிளிநொச்சி கண்டாவளை (சிறுமியின் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த 6 வயது சிறுமியை 67 வயது வயோதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு அருகில் இருந்த பற்றைக்குள் சிறுமியை வீசிவிட்டு சென்று விடுகிறார்.
சிறுமி வீடு வந்து சேராததால் உறவுகள் தேடி பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சையின் பின்னர் காப்பாற்றப் படுகிறாள்.
அதன் பின்னர் கண்டவளை (இடம் மாற்றப்பட்டுள்ளது) காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.
நாளந்த பத்திரிகைகளும் இந்த சம்பவத்தினை துருவித் துருவி எழுத தொடங்கின.
இதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தந்தை எதிர்காலத்தில் தங்களது பிள்ளையின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கருதி வழக்கினை வாபஸ் பெறுகின்றனர்.
இந்த விடையம் பத்திரிகை ஊடாக வெளிவருகிறது. செய்தியை படித்த தலைவர் பிரபாகரன் உடனடியாக தமிழ்ச்செல்வன் அவர்களை அழைத்து அந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறும் அந்த சிறுமையை பாதிக்காதவாறு விசாரணை நடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதன்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய வயோதிபர் மூன்று மாதங்களுக்குள் தமிழீழ காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்.
கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி அந்த வயோதிபர் அந்த சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தாலும் கொலை செய்யாத காரணத்தினால் அவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை அறிந்த தலைவர் பிரபாகரன் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் மற்றும் அரசியல்துறை மற்றும் காவல்துறை பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் கூறியது என்ன வெனில் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால் அதாவது 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதால் இந்த தண்டனை வழங்க முடியாதெனவும், அந்த வயோதிபருக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதோடு, தமிழீழ நீதித்துறை சட்டத்தில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துமாறு கூறினார்.
அதாவது 16 வயதுக்குட்பட்ட சிறுமி, விரும்பி ஒரு ஆணுடன் உறவுகொண்டாலோ அல்லது ஒரு ஆண் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலோ அது வல்லுறவாக கருதப்பட்டு அந்த ஆணுக்கு அதி உச்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும்.
என நீதி சட்டத்தில் சேர்க்குமாறு கூறினார். இந்த சட்ட திருத்தம் கொண்டுவரும் போது விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு தளபதிகள் மற்றும் தலைவரின் மனைவி மதிவதனி ஆகியோர் இருந்தனர்.
அதன் படி அந்த வயோதிபருக்கு அந்த பிரதேசத்தில் வைத்து மக்கள் முன்னியில் தமிழீழ காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் தமிழீழத்தில் எந்தவொரு சிறுமியும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.