நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவக திருத்தச்சட்டமூலம் ஆகியவை மீதான விவாதம் நடைபெற்றது.
குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , தமிழீழ கோரிக்கைக்கு தீனி போடும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையக்கூடாது என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் வாழும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர். அவர்களுக்கான சம்பளம் நியாயமான முறையில் இல்லை. காணியுரிமை அற்றவர்களாகவே இருந்தனர்.
1987ஆம் ஆண்டுதான் பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டது. மக்கள் வரிசெலுத்தினாலும் அதை அனுபவிக்கமுடியாத நிலை தோட்டப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இன்று அந்தத் தடை நீங்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்.
கல்வியில் காட்டப்பட்ட பாரபட்சம் காரணமாகவே இலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடித்தது. பௌத்த மேலாதிக்க சிந்தனையிலிருந்து நீங்கள் வெளிவரவேண்டும்.
அதேவேளை, தாம் தனி ஈழம் கேட்கவில்லை என அமைச்சர் திகாம்பரம் கூறினாராம். நாம் தனிஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கிஎறியவில்லை. இப்படியான சிந்தனை, எண்ணம் நீங்கவேண்டுமானால் எமக்கு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும்.
எமக்குரிய கலை, கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்வதற்குரிய உரிமைவேண்டும். அதைச் செய்யாது தொடர்ந்தும் புறக்கணிப்புகளைச் செய்து, தனிஈழம் கோருபவர்களுக்குத் தீனி போடும் வகையில் தென்னிலங்கை செயற்படக்கூடாது” என கூறினார்.