மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் தரித்தபோது ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை என தெரிந்தது.
இதனைதொடர்ந்து உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த நர்ஸ் ஜோதிலெட்சுமி, ராமுத்தாய்க்கு தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
உரிய மருத்துவ உபகரணங்களின்றி தவறான முறையில் கருக்கலைப்பு செய்ததால் ராமுத்தாய் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ராமுத்தாயின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு, நர்சை கைது செய்ய வலியுறுத்தினர்.
சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
ராமுத்தாய் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கணவர் ராமர் புகாரின்படி உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து நர்ஸ் ஜோதிலெட்சுமியை நேற்று கைது செய்தனர்.
ராமுத்தாயின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.