தான் ஒரு “தேச துரோகி” என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட்.
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் சிலருக்கு வருத்தமளிக்கும் வகையில் இருக்கலாம்.
“இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது” என கூறுகிறார் ஜுட் ரத்னம்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.
போர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இலங்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.
ஒரு முக்கிய சித்தரிப்பு
நிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.
ஆனால், தனது ‘Demons in Paradise’ திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
“வேறு பல படங்கள் உள்ளன… தமிழர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே அவை சித்தரிக்கின்றன. இதில் பல சிக்கல் இருக்கிறது.”
தற்கொலைப்படை தாக்குதல், சிறுவர்களை ராணுவத்தில் பயன்படுத்துவது என விடுதலைப் புலிகள் பல கொடூரமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இலங்கையின் உள்ளேயும் வெளியேவும் உள்ள தமிழர்கள், புலிகளை கதாநாயகர்களாக பார்க்கின்றனர்.
சிங்கள கும்பல் நடத்திய வன்முறையில் இருந்து புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என பலரும் நினைத்தனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழுக்கு எதிராக சட்டங்களை இயற்றியதோடு, 1956ஆம் ஆண்டு இலங்கையின் அதிகாரபூர்வமான மொழி சிங்களம்தான் என்றும் அறிவித்தது.
ஆனால், இயக்குநர் ரத்னத்தின் கருத்துபடி, தமிழர்களை பாதுகாக்கிறேன் என்று தன் சொந்த மக்களுக்கே பல கொடுமைகளை புலிகள் செய்ததாக கூறுகிறார்.
தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பதிலளிக்கும் வகையில் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் தேசிய குழுக்கள் பற்றிய பார்வையில் இவரின் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்டனர். இறுதியில் விடுதலை புலிகள் வென்றனர். ஒரு சம்பவத்தில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பான டெலோ அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் அவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.
மற்றொரு எதிர் தமிழ் அமைப்பில் சண்டையிட்ட உறவினரை பின் தொடர்கிறார் ரத்னம். அவர் விடுதலைப் புலிகளின் விமர்சகர்கள் சிலரை சந்திக்கிறார்.
ஒரு காட்சியில், விடுதலை புலிகள் செய்த கொடுமை என்று கூறி ஒரு நபர் விவரிக்கிறார்.
“என் தந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டிலோடு தூக்கிச் சென்றனர். இரும்புப் பெட்டியால் அவரை கொடுமை செய்தனர். அவர் பின்னால் இரும்புப் பெட்டி வைத்து தேய்த்து, அவரது கண்ணை குண்டூசியால் குத்தினார்கள். இதனை பலருக்கும் அவர்கள் செய்தார்கள்.”
பிரிந்த எதிர்வினை
2017ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Demons in Paradise படம் திரையிடப்பட்டதில் இருந்து பல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இலங்கையில் சிங்கள மொழி ஊடகங்கள் இத்திரைப்படத்தை புகழ்ந்துள்ளனர். டெய்லி மிரர் நாளிதழ் இப்படத்தை ” இலங்கையிலேயே இலங்கை நபரால் எடுக்கப்பட்ட நேர்மையான, தைரியமான மற்றும் முக்கியமான ஒரு திரைப்படம்” என்று விவரித்திருந்தது.
பெரும்பாலான விடுதலை புலிகளின் தலைவர்கள் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். அதனால் இத்திரைப்படத்திற்கான அவர்களது எதிர்வினை என்ன என்பது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், பரந்துபட்ட தமிழ் சமூகத்துக்கு இது கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.
நார்வே நாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அடையாளத்தில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளரான அதிதன் ஜெயபாலன், தமிழ் புலிகள் செய்த குற்றங்களை மறுக்கவில்லை.
எனினும், இலங்கை போர் குறித்து பெரிதும் தெரியாத வெளிநாட்டு மக்களை இந்தப் படம் தவறாக வழிநடத்தும் என்று நினைப்பதாக கூறுகிறார்.
இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை பார்க்கும்போது விடுதலை புலிகள் செய்தது குறைவாகவே கருதப்படுகிறது என்று நம்புகிறார் ஜெயபாலன்.
இத்திரைப்படம் சரியான சூழுலை காண்பிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை
விடுதலை புலிகள் மீது வேண்டுமென்றே கவனம் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்கிறார் இயக்குநர் ரத்னம். வெளிநாடு வாழ் தமிழர்களையும், புலிகளை நல்லவர்கள் என்று கற்பனை செய்து கொண்டிருப்பவர்களையும் எச்சரிப்பதற்கே இந்தப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
“நீங்கள் உங்கள் சொந்த நிலத்தை விட்டு சென்றிருந்தாலும் அதன் நினைவுகள் உங்களிடம்தான் இருக்கும்… ஆனால், உண்மை என்னவென்றால் உங்கள் ஊரில் நிறைய விஷயங்கள் மாறியிருக்கும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தை அதிகமாக வரவேற்கலாம்” என்று ஜூட் ரத்னம் தெரிவித்தார்.
ஆனால், இதனை மறுக்கிறார் இலங்கையை அடிப்படையாக கொண்ட மனித உரிமை ஆர்வலர் மதுரி தமிழ்மாறன். கொழும்புவில் Demons in Paradise படத்தை பார்த்த மதுரி, இப்படத்தை தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயக்குனர் ரத்னம் ஏன் திரையிடவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.
“இப்படம் தமிழ் மக்களுக்கானது. ஆனால், தமிழ் மக்களுக்கு இது திரையிடப்படவில்லை” என்கிறார் அவர்.
காயங்களை குணமாகி வருகிறதா?
கடந்த தசாப்தத்தில் இலங்கையில் அமைதி திரும்பியது. ஆனால், இலங்கை இன்னும் இனவெறியால் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்திற்கு வரும் எதிர்வினைகளே உதாரணம்.
இத்திரைப்படத்திற்கு வந்த பின்விளைவுகள் எதிர்பார்த்ததுதான் என்று கூறும் ஜூட் ரத்னம், இலங்கையில் தமிழர்கள், சிங்களர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட தன் படம் உதவும் என்கிறார்.
“தமிழ் சமூகத்தின் மேல் உள்ள களங்கத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். அதனை மறுத்து, இதில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தால் எப்போதும் அதே இடத்தில்தான் இருப்போம்” என்கிறார் ஜூட்.