பொலிஸ் மாஅதிபரிடம் குறைபாடுகள் இருக்கலாம், அதற்காக வேண்டுமென்றே அவர் மீது சிலர் சேறு பூசி வருகிறார்கள் என்று சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவைகள் என்றும், குற்றச்சாட்டு உள்ளதென்பதற்காக அவர் தொடர்பிலான நல்ல செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனக்குத் தெரிந்த வரை பொலிஸ் மாஅதிபர் தனது உரிமைகளைப் பெறக்கூட அதிக ஆர்வம் காட்டாத ஒருவர். இன்னமும் சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். அண்மையில்கூட அமைச்சர் காரை ஏன் மாற்றக்கூடாது என கேட்டதற்கு, இது போதும் என்று சாதாரணமாக பதிலளித்தவர் அவர்.
அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தவராவார்.
கடந்த அரசாங்கத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாகவே போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் பொலிஸ் மாஅதிபரின் கடுமையான செயற்பாட்டால் தற்போது அனைத்து நடவடிக்கைகளும் குறைவடைந்துள்ளன என்றும் பிரதியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.