தினமும் ஏதோவொரு பொருளின் விலையை அதிகரிப்பதுதான் அரசின் முக்கிய கடமையாகிவிட்டது. மக்களைப் பற்றிய சிந்தனையும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் மக்கள் இந்த அளவுக்குப் பொருளாதாரச் சுமைகளால் அல்லாடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எந்த வகையிலாவது நாட்டு மக்களின் சுமைகளைக் குறைத்து விடுவதே நல்லதொரு அரசின் இலட்ச ணமாகும். ஆனால் ‘நல்லாட்சி’ என்ற பெயரை வைத்துக்கொண்டு மக்களை வாட்டி வதைப்பது எந்த வகையிலும் நியாயமானதாகத் தெரியவில்லை.
முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் போரையே காரணமாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று போர் ஓய்ந்து சுமார் 10 வருடங்கள் ஆகப் போகின்றன. இந்த நிலையிலும் முன்னேற்றம் இல்லையென்றால் தவறு எங்கோ உள்ளது? என்பதுதான் அர்த்தமாகும்.
போர் மற்றும் இடர்கள் காரணமாக மோசமான அழிவுகளைச் சந்தித்த பல நாடுகள் அவற்றிலிருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காண முடிகின்றது. வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். ஆனால் அது எமது நாட்டினால் முடியாமல் போய்விட்டது. இன்னமும் பிறரிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாடு மோசமானதொரு கட்டத்தை எட்டியதற்கு ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகளும் முக்கிய காரணமாகும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இவை தாராளமாகவே இடம்பெற்றிருந்தன. தற்போதைய ஆட்சியிலும் அவை தொடரத்தான் செய்கின்றன. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி இவற்றுள் மிகப் பெரியது. இந்த நிலையில் நாடு எவ்வாறு தலை நிமிர்ந்து நிற்க முடியும்?
இந்த நாட்டின் அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிப்பதிலும், சொத்துச் சுகங்களைத் தேடுவதிலும் மட்டடுமே கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றனர். இவர்கள் நாட்டைப் பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ சிறிதும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது.
இதைவிட இனப்பிரச்சினை இந்த நாட்டை ஆட்டிப்படைத்து வருகின்றது. அதற்குத் தீர்வுகாண வேண்டியவர்கள் இனவாதத்தைத் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு நாட்டைச் சீரழிப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் வரையில் இனப்பிரச்சினை தொடரவே செய்யும்.
இன ரீதியான பாகுபாடுகள் தற்போது அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. தமிழர் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்துகின்ற நடவடிக்கைகள் அரசின் அணுசரணையுடன் இடம்பெறுவதையும், அந்தப்பகுதி மக்கள் அதற்கு எதிராகப் போராடுவதையும் காண்கின்றோம்.
போர் ஓய்வுபெற்ற நிலையில் மக்களை மீண்டும் போராடுவதற்கு அரசு தூண்டுவது நாட்டின் அமைதிக்குப் பங்கமாக அமைந்துவிடப் போகின்றது. தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய செயல்கள் வடபகுதியில் தொடர்ந்து இடம்பெறுவதால் அங்கு கொந்தளிப்பான நிலை காணப்படுகின்றது.
இனங்களுக்கிடையில் மோதல் நிலை உருவாவது நல்ல தொரு விடயமாகத் தெரியவில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் இதைப் பெரிதாக எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசுத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனொன்றும் கிடைக்கவில்லை. பன்னாட்டுச் சமூகத்திடமும் அவர் இது தொடர்பாக விளக்கிக் கூறிவிட்டார். ஆனால் எவ்வித பயனும் இதுவரை கிடைக்கவில்லை.
அயல் நாடான இந்தியாகூட இதில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றது. பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் கடுமையாக இருக்காத வரையில் இலங்கை அரசு எதையுமே செய்யாது என்பதுதான் யதார்த்தமாகும்.
அரசின் குறைபாடுகளை மகிந்த தரப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது.
அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டு வதன் மூலமாக மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பி விடுகின்ற முயற்சிகளிலும் அது ஈடுபட்டு வருகின்றது. இதனால் சாதகமான விளைவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் கட்சிபெற்ற வெற்றி இதை உறுதி செய்கின்றது.
எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் தேர்தல்களிலும் இது நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
எது எப்படியிருந்த போதிலும் மைத்திரியும், ரணிலும் இணைந்து அமைத்துக்கொண்ட ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும். அரசின் மீதமுள்ள காலத்திலாவது அது எதையாவது செய்யுமென்றிருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் வழங்கிய அரியதொரு சந்தர்ப்பம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மையாகும்.