நமது மாறிவரும் உணவு முறை போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையும், அதனை தீர்க்கும் வழிமுறையையும் பார்க்கலாம்.
வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.
மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்
நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம்.
உணவுக்குழாயைக் காக்க…
காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.
மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை, பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்சனையைச் சரிசெய்யும்.
உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!
உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.
காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் நீர் அருந்த வேண்டும்.
சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனை வராது.
நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.
“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.
கற்றாழை: காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.
வெள்ளரி: வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்சனையைச் சரிசெய்யும்.
இஞ்சி: இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்