தற்போது நடைபெறும் ஆட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் இடம்பெற்ற போதே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலம் கூறியதாவது, காலம் முழுவதும் கருணாநிதியை எதிரியாக கொண்டு எம்.ஜி. ஆரால் ஆரம்பிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆகும்.
அதன் வழியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார், நாம் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர்.
இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.
கருணாநிதி ஆட்சியில், 1996 ஆம் ஆண்டு டி.டி.வி.தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார்.
அதுகுறித்து வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் கருணாநிதியை சந்தித்து, இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து கருணாநிதிதான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை விடுவித்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கருணாநிதியை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார்.
தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார்.
அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் உடன்படிக்கை போட்டு உள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி. தினகரன் தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி.தினகரன் தான். கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.
டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம்.
தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.