பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கின், டேம்பன்களுக்கு பதிலாக மென்சுரல் கப் என்ற புதிய சாதனம் உபயோகிக்கப்படுகிறது.
மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஏராளம் என்றாலும், அடிக்கடி நாப்கின் மாற்றுவது பெரிதும் எரிச்சல் தரக்கூடிய விஷயம் தான். தற்போது அந்த தொல்லைக்கு தீர்வாக மென்சுரல் கப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய கோப்பை வடிவிலான இந்த கப் மருத்துவ தரத்திலான சிலிக்கான் மற்றும் லேட்டக்ஸ் ரப்பரால் தயாரிக்கப்படுகிறது. இது நாப்கின் பயன்படுத்துவதை விட பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதும் ஆகும்.
நாப்கின் Vs மென்சுரல் கப்
நாப்கின் அல்லது டேம்பன் உபயோகிப்பது மாதவிடாயின் உதிரப்போக்கை உறிஞ்சிக் கொள்ளும், ஆனால் மென்சுரல் கப் அவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளும்.
நாப்கின்களை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்த வேண்டும், ஆனால் மென்சுரல் கப்பை பலமுறை பயன்படுத்தலாம். நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளது ஆனால் மென்சுரல் கப்பால் சுகாதார கேடு ஏற்படாது.
நாப்கினின் விலையோடு மென்சுரல் கப் விலை அதிகமாக இருந்தாலும், இதனை கிட்டதட்ட 8 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம். ஒரு மென்சுரல் கப்பின் விலை ரூ.600-700 வரையாகும்.
மென்சுரல் கப்பை பயன்படுத்துவது எப்படி?
ஆழமாக சுவாசித்து, உடலை தளர்த்திக் கொண்டு பெண்ணுறுப்பின் வழியே மென்சுரல் கப்பின் மேற்பரப்பை ‘C’ வடிவத்தில் உள்ளே செருகினால், அது தானாக ஒரு கப் போல விரிந்துக் கொள்ளும்.
கப் இறுக்கமாக பொருந்தியுள்ளதை சரிபார்க்க, உங்கள் விரல்களைக் கொண்டு துழாவி, லேசாக சுழற்றிப் பார்க்கலாம்.
உதிரப்போக்கின் அளவை பொறுத்து 4 முதல் 12 மணி நேரத்திற்குள் கப்பை கழுவிவிட்டு பயன்படுத்தவும்.
கப்பினை வெளியே எடுக்க, கப்பின் அடிப்பகுதியை லெசாக அழுத்தி, கொஞ்சம் நகர்த்தி நகர்த்தி வெளியே இழுக்கவும். சேரும் உதிரத்தை டாய்லட்டில் அப்புறப்படுத்திவிட்டு சுடு நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். இது போல 7-8 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
மென்சுரல் கப்பின் பக்க விளைவு
திருமணமான பெண்களுக்கு அதாவது ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்ட பெண்கள் மட்டுமே இதனை லாவகமாக உபயோகிக்க முடியும். ஏனெனில், பெண்ணுறுப்புக்குள் கப்பைச் செருகும்போது கன்னித்தன்மைக்கான அடையாளமாகக் கருதப்படும் கன்னித்திரை எனும் சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. ஆகையால் இளம்பெண்கள் சிலரால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
ஒவ்வொரு பெண்களுக்கும் கருப்பை அமைப்பு மாறுபடும். சிலருக்கு மென்சஸ் கப் பொருந்தாமல் போகலாம்.
இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், உங்கள் கப்பை வேறு யாரும் பயன்படுத்தக் கொடுக்கக்கூடாது.
சிலிக்கான் அலர்ஜி இருப்பவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். முதன்முறையாக பயன்படுத்தும்போது மருத்துவரை அனுகிவிட்டு உபயோகிப்பது நல்லது.
மென்சுரல் கப் பயன்பாடு குறித்து ஊடகவியலாளர் பனிமலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.