ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.
விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.