அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்ததால் அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போராட்டம் 11ஆவது நாளாக இன்று தொடர்கின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில், நேற்று முன்தினம் இரவில் இருவரினதும், நேற்று மேலும் இரு கைதிகளினதும் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரே அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கடந்த வாரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள 4 கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.