விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த கருணா, அதிக நம்பிக்கை வைத்தது போர்நிறுத்த ஒப்பந்தத்திலேயே. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை மீறி, புலிகள் பெருமளவு படையணியை, கனரக ஆயுதங்களுடன் நகர்த்த மாட்டார்கள் என கருணா நினைத்தார். ஏ 11 வீதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. விடுதலைப்புலிகள் அந்த வீதியை கடக்க இராணுவம் அனுமதிக்காதென கருணா நம்பினார். இந்தளவு விசயங்களையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
புலிகள் ஏ 11 வீதியை கடந்ததுடன், அம்பாறையின் திருக்கோவிலிலும் தரையிறங்கினார்கள். அங்கிருந்தபடி கருணாவின் இளநிலை தளபதிகளுடன் தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பேச்சு நடத்தினார்கள். கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் இந்த பேச்சு நடந்தது. களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள கருணாவின் முகாமில் இருந்தவர்களுடனேயே இந்த பேச்சு நடந்தது. கருணாவின் இரண்டாம் நிலை தளபதிகள் பலர் இந்த சமயத்திலேயே, இரண்டு மனநிலைக்கு மாறினார்கள்.
கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள் ஜிம்கெலி தாத்தா, ரெபோர்ட் உள்ளிட்ட பலரை புலிகளின் பக்கம் மீண்டும் திருப்பியது இந்த பேச்சுத்தான். ஆனால் அந்த பேச்சு நடந்த உடனே அவர்கள் புலிகளின் பக்கம் வரவில்லை. அதன் பின்னரும் கருணாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் இரண்டு மனநிலை மூலம் கருணாவை பலவீனப்படுத்துவதையும் புலிகள் உத்தியாக பாவித்தார்கள்.
ஒரு நாள் முழுவதும் நடந்த பேச்சின்பின் களுவாஞ்சிக்குடி முகாமில் இருந்த கருணா அணியினர், மனம்மாறி புலிகளுடன் இணைந்தனர். அவர்களின் மூலமே தரவை மற்றும் வடமுனை முகாம்கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தபோது, தனது படையணிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கிழக்கை முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமென்றுதான் கருணா கணக்குப் போட்டார். ஆனால் அது நடக்கவில்லை. கருணாவின் கனவை புலிகளின் தொடர் நடவடிக்கைகள்தான் கலைத்தன என்றாலும், கருணாவிற்கு உயிர்ப்பயத்தை ஏற்படுத்தி, இனி கிழக்கில் நிற்க முடியாதென்ற நிலைமையை ஏற்படுத்தியது, மேலே சொன்ன இரண்டு முகாம்கள் மீதான தாக்குதலே.
தரவை, வடமுனையில் கருணா இரகசியமாக முகாம் அமைத்திருந்தார். ஆயுதங்களும் அங்கு சேமிக்கப்பட்டிருந்தன. கருணா அணியின் அதிஉயர்மட்ட இரகசிய முகாம்களாக அவை இருந்தன.
அந்த முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோதுதான், நிச்சயமற்ற தன்மையை கருணா உணர்ந்தார்.தனக்கு விசுவாசமானவர்கள் என யாரை அடையாளப்படுத்தலாமென்பதில் அவருக்கு குழப்பம். நம்பிக்கையானவர்கள் என அவர் நம்பியவர்கள் இப்பொழுது புலிகளுடன். கூடவே, பாதுகாப்பானதென கருதிய முகாம்களையும் புலிகளிடம் காட்டி கொடுத்து விட்டார்கள்!
தரவை, வடமுனையில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது, கருணா குடும்பிமலையில் இருந்த மருதம் முகாமில் இருந்தார். இரண்டு பிரதேசங்களிற்குமிடையில் அதிக தூரம் இருக்கவில்லை. எந்த நேரமும் புலிகள் மருதம் முகாமை தாக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது.
இப்படியொரு நிலைமையை கருணா எதிர்பார்க்கவில்லை. 09,10,11ம் திகதிகளில் கருணா எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, அவர் மிக குழம்பிய நிலையில் காணப்பட்டார். அவர் எதிர்பார்த்ததொன்று, ஆனால் நடந்தது தலைகீழாக.
கிழக்கில் தனது படையணிகளுடன் நிற்க முடியாதென்ற நிலைமை ஏற்பட்டபோது கருணாவிற்கு மிக குறைந்த தெரிவுகளே இருந்தன. மீண்டும் புலிகளுடன் இணைய முடியாது. தனக்கு மரணதண்டனை விதிப்பார்கள் என கருணா நினைத்தார். வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதும் ரிஸ்க் ஆனது. ஆயுள் முழுவதும் வீட்டுக்கு வெளியே தலைகாட்டாமல் பதுங்கியிருக்க வேண்டும். அப்படியிருந்தும் புலிகள் மோப்பம் பிடித்தால், போட்டுதள்ளி விடுவார்கள். அடுத்தது, அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வது. இதற்குள்ளும் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது. இரண்டு, வெளிப்படையாக இணைந்து செயற்படாமல் இருப்பது. (இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுவிட்டு, அரசுடன் எனக்கு தொடர்பில்லையென கூறினாலும் யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் தனித்து இயங்குகிறோம் என சொல்லிக்கொள்ளலாம்)
என்ன செய்வதென்ற குழப்பத்தில் தனது உயர்மட்ட தளபதிகளை மருதம் முகாமிற்கு 10ம் திகதி அழைத்தார். எல்லோரும் பதற்றத்துடன் இருந்தார்கள். அடுத்து என்ன செய்யலாமென்ற ஆலோசனை நடந்தது. கருணாவிற்கு மிக விசுவாசமான ஒருவர் சொன்னார்- “நாங்கள் மட்டக்களப்பில் இனி தனித்து நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. அதனால் இராணுவத்துடன் சேர்ந்து செயற்படுவோம். அப்படியென்றால்தான் புலிகளை சமாளிக்கலாம்“ என.
அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது, அங்கு சலசலப்பு உருவாகிவிட்டது. “புலிகள் எங்களுக்கு சரியான அங்கீகாரம் தரவில்லை, எம்மை வைத்தே யுத்தம் செய்கிறார்கள், எமது பகுதியை நாமே கவனிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். சரி, அதை ஏற்றோம். ஆனால், அதற்காக இராணுவத்துடன் எம்மால் இணைய முடியாது. நாம் காட்டுக்குள் தலைமறைவாக இருந்து புலிகள், இராணுவம் இரண்டு தரப்புடனும் போராடுவோம்“ என்றார்கள் பல தளபதிகள். இதனால் அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கூட்டத்தின் பின் கலந்துபேசிய தளபதிகள் பலர், கருணாவின் முடிவுடன் உடன்படுவதில்லையென்ற முடிவை எடுத்தனர். இந்த சமயத்திலேயே களுவாஞ்சிக்குடி முகாமுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்தி பேசினார்கள். கருணாவை நம்பி புலிகளையும் பகைத்தாகி விட்டது, கருணாவின் முடிவுடன் தொடர்ந்து உடன்பட முடியாமலிருக்கிறதென்ற தத்தளிப்பில் தளபதிகள் இருந்த சமயத்தில், புலிகள் தரப்பிலிருந்து சாதகமான சிக்னல் கிடைக்க, பல தளபதிகள் புலிகளிடம் சரணடைய ஆரம்பித்தனர்.
மொத்தத்தில் கருணாவின் சாம்ராஜ்யம் உடைந்து கொட்டுப்பட ஆரம்பித்தது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியாத நெருக்கடியை, ஒவ்வொரு நாளும் அதிகம்அதிகமாக புலிகள் ஏற்படுத்தினார்கள்.
கருணா விவகாரத்தை இயன்றவரை சமரசமாக முடிக்கவே புலிகள் விரும்பினார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். மிகப்பெரிய அமைப்பாக வளர்ச்சியடைந்த புலிகள், இராணுவரீதியிலான எந்த விட்டுக் கொடுப்பையும் கருணாவுடன் செய்துகொள்ள தயாராக இருக்கவில்லை. ஆனால், கருணாவிற்கு பொதுமன்னிப்பளித்து, கருணா எடுத்துக்கொண்ட சொத்துக்களுடன் வெளிநாட்டிற்கு சென்று வாழ அனுமதித்தார்கள். ஆனால் அப்பொழுது கருணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
புலிகள் கருணாவின் மீது இறுதி தாக்குதலை ஆரம்பித்த சமயத்தில், கிழக்கிலுள்ள சில பிரமுகர்கள், வெளிநாடுகளில் இருந்த சில பிரமுகர்கள், சில அமைப்புக்கள் என பல முனையில் சமரச பேச்சுக்கள் ஆரம்பித்தன. இரண்டு தரப்பிற்குள்ளும் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த அவர்கள் முயன்றனர். கருணா கிழக்கை விட்டு வெளியேற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து புலிகள் பின்வாங்கவில்லை. ஆரம்பத்தில் இதற்கு கருணா உடன்படாததாலேயே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆனால், புலிகளின் அதிரடி தாக்குதல் ஆரம்பித்த பின்னர், சமரசத்திற்கு கருணா இறங்கி வந்தார். அவருக்கு அதைவிட வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
இதன்மூலம் இரண்டு தரப்பும் தலா எட்டு வாக்குறுதிகளை வழங்கி, இரகசிய உடன்படிக்கைக்கு இணங்கினார்கள். இவை அனைத்துமே வாய்மூலமான இரகசிய வாக்குறுதிகள். உயர்மட்ட அளவில் நடந்த பேச்சுக்களில் பரிமாறப்பட்டவை. மிகச்சில பேர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயங்கள் அவை. தமிழ்பக்கம் வாசகர்களிற்காக இப்போது அவற்றை தருகிறோம்.
கருணா தரப்பிலிருந்து புலிகளிற்கு எட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
♦ உடனடியாக கருணா போராட்டத்தை நிரந்தரமாக நிறுத்திக்கொள்வார்.
♦ கிழக்கிலுள்ள முகாம்களில் நிலைகொள்ள வைக்கப்பட்ட படையணிகளை மீளப்பெற்று, அவற்றை கலைத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
♦ கருணா அணியிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும் புலிகளிடம் மீள ஒப்படைப்பார்கள். புலிகளின் எந்தவித இராணுவ சொத்தும் கருணா தரப்பினர் வைத்திருக்க முடியாது.
♦கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், போராளிகளை உடனடியாக ஆபத்தின்றி விடுதலை செய்வார்கள்.
♦வடக்கு, கிழக்கில் இருந்து கருணா (இந்த இடத்தில் தமிழீழம் என்ற சொல்லை பாவித்திருந்தார்கள்) உடனடியாக வெளியேறுவார். எந்த காலத்திலும் இங்கு திரும்பி வர மாட்டார்.
♦எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பார்.
♦வெளியேறிய பின்னர் புலிகளை விமர்சிக்கமாட்டார். புலிகள் பற்றிய அனைத்து விசயங்களிலும் மௌனம் சாதிப்பார். ஊடக பேட்டிகளிலிருந்து ஒதுங்கியிருப்பார்.
♦உடனடியாக வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா பகுதிக்கு சென்றாலும், இயன்ற விரைவில் இலங்கைக்கு வெளியே ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்.
இதற்கு பின்னர் விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து எட்டு வாக்குறுதிகள் கருணாவிற்கு வழங்கப்பட்டன. அவை-
♦ கிழக்கை விட்டோ அல்லது இலங்கையை விட்டோ கருணா வெளியேறுவதற்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம்.
♦ கிழக்கிலிருந்து வெளியேறி இலங்கையின் ஏனைய பகுதியில் இருக்கும்போதோ, அல்லது இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் இருக்கும் போதோ, கருணாவை கொல்லும் எண்ணம் இல்லை. அப்படியொரு முயற்சி நடக்காது.
♦ கருணாவால் எடுக்கப்பட்டுள்ள புலிகளின் சொத்துக்களான பணம் மற்றும் பெறுமதியான ஏனையவற்றை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்கப்போவதில்லை.
♦ கருணாவுடன் பிரிந்து சென்ற போராளிகளிற்கு எந்த கெடுதலும் செய்யமாட்டோம். அவர்களின் இயல்பு வாழ்க்கையை தொடர அனுமதிப்போம்.
♦ அதேநேரம், கருணா அணியிலிருந்த யாராவது, மீண்டும் எம்முடன் இணைய விரும்பினால் அதை எங்களால் தடுக்க முடியாது.
♦ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு எதிராக, கருணாவுடன் இணைந்து சாதாரண போராளிகளை வழிநடத்திய கருணாவின் கீழிருந்த தளபதிகளையும் தண்டிப்பதில்லை. சிறிய விசாரணையின் பின்னர், அவர்கள் விரும்பிய முடிவை எடுக்கலாம்.
♦ கிழக்கை விட்டோ அல்லது இலங்கையை விட்டோ அவர்கள் செல்ல விரும்பினால், அதற்கு எந்த தடையும் விதிக்கமாட்டோம்.
♦ கருணாவிற்கு ஆதரவு தெரிவித்த மற்றும் புலிகளின் அலுவலகங்களிற்கு நெருப்பு வைத்த, கொடும்பாவிகளை எரித்த கிழக்கு பொதுமக்களிற்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
இரண்டு தரப்புடனும் பேச்சு நடத்திய சில இடைத்தரகர்களின் மூலமே இந்த வாக்குறுதிகள் பரிமாறப்பட்டன. கிழக்கு விசயத்தை சுமுகமாக முடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால் புலிகள் ஒரேயொரு நிபந்தனை வைத்திருந்தார்கள். இந்த உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிப்பதென்றால், கருணா தரப்பிலிருந்து ஒரு விசயம் நடக்க வேண்டும். தனது அமைப்பை கலைத்துவிட்டு, கிழக்கிலிருந்து வெளியேறுகிறேன் என எழுத்துமூலம் கருணா அறிவிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை!
2004 ஏப்ரல் 11ம் திகதி காலை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்திற்கு கருணா ஒரு தொலைநகல் அனுப்பினார். தனது அமைப்பை கலைத்து விட்டு, கிழக்கைவிட்டு வெளியேறிச் செல்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
புலிகள்- கருணாவிற்கிடையிலான எழுதப்படாத உடன்படிக்கை 2004 ஏப்ரல் 11ம் திகதி காலையில் ஆரம்பித்தது!
அன்றுதான் கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை கருணா ஆரம்பித்தார். தனது கட்டுப்பாட்டில் இருந்த தாக்குதல் அணிகளை ஒரு இடத்தில் ஒன்றுகூட வைத்து, தனது முடிவை அறிவித்தார். உயர்மட்ட தளபதிகள் இதை மௌனமாக ஏற்றுக்கொண்டனர். அடிமட்ட போராளிகள் சிலர்தான் கருணாவிற்காக கதைத்து, இந்த முடிவை ஏற்க முடியாதென்றார்கள். ஆனால், அண்ணளவாக 3,000 வரையான போராளிகளை கருணா வீடு செல்ல பணித்தார். அவர்களின் ஆயுதங்களும், சீருடைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டது. அடையாள அட்டை, சயனைட் குப்பி மற்றும் புலிகளின் உடமைகள் அனைத்தும் வாங்கப்பட்டது. முகாமிலிருந்த புலிகள் சாதாரண உடையுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். விசயத்தை கேள்விப்பட்ட பல பெற்றோர், முகாம் வாசலுக்கு வந்து தமது பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
இன்னொரு முகாமில் நிலாவினி தலைமையில் 400 பெண் போராளிகள் நின்றார்கள். ஆண் போராளிகளை போல, பெண் போராளிகளை இந்த விசயத்தில் கருணாவால் சமாளிக்க முடியவில்லை. “கிழக்கில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பை கலைக்கிறேன். நான் புலிகளில் இருந்து விலகி கொழும்பிற்கு செல்கிறேன். நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். இப்போது, உங்களின் ஆயுதங்கள், சீருடை, குப்பி, தகடு என்பவற்றை ஒப்படையுங்கள்“ என கருணா அவசரகதியில் உரையாற்றினார். ஆரம்பத்தில் இதை, பெண் போராளிகள் நம்பவில்லை. கருணா விளையாட்டாக பேசுகிறார் என்றுதான் நினைத்தார்கள்.
அவர்கள் புரியாமல் பேசிக்கொண்டிருந்தது கருணாவிற்கு எரிச்சலையூட்டியது. விடுதலைப்புலிகள் தாக்க வருகிறார்கள், ஒரு நிமிடம் தாமதித்தால்கூட உயிராபத்தாகிவிடும் என கருணா எச்சரித்தார். ஆனால் அந்த பெண்போராளிகள் வீட்டுக்கு செல்ல சம்மதிக்கவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல், தனது மெய்ப்பாதுகாவலரை அழைத்து, அவரிடமிருந்த கைக்குண்டு ஒன்றை அந்த போராளிகளிற்கு அண்மையில் வெடிக்க வைத்தார். பெண் போராளிகள் கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள்.
2004 ஏப்ரல் 12ம் திகதி. கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லும் ஏற்பாட்டை கருணா செய்திருந்தார். அப்போதைய ஐ.தே.க எம்.பி அல்சாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில், கருணா மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி புறப்படவிருந்தார். புறப்படுவதற்கு சற்று முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது.
அதுதான் புலிகள்- கருணா உடன்படிக்கையின் முதலாவது மீறல். அந்த உடன்படிக்கை வலுவிழக்க காரணமாக இருந்ததும் அதுதான். அந்த தவறை கருணா தரப்பே செய்தது.
அது என்ன தவறு?