வாஷிங்டன்: ” இந்தியாவை நான் நேசிக்கிறேன். மோடிக்கு என் அன்பை தெரிவியுங்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலம் தெரிவித்தார்.
நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73-வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார்.
நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டம் முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுவராஜை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் ” பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன் என சுஷ்மா கூறினார்.
அதற்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார்.