பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த நிலையில் இந்த ஆதிக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லுகா மாட்ரிச்.
இந்நிலையில், கால்பந்து உலகின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான பீபா விருதுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரொனால்டோ, மெஸ்ஸி, மபாபே, மோ சாலா, லுகா மாட்ரிச் உள்ளிட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதில், குரோஷியா நாட்டின் மிட் பில்டரான லுகா மாட்ரிச் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ரொனால்டோவும், மெஸ்ஸியும் மாறி மாறி வாங்கி வந்த இந்த விருதை 10 ஆண்டுகளுக்குப் பின் லுகா மாட்ரிச் வென்றுள்ளார். இதுதவிர, இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்தையும் லுகா மாட்ரிச்சே வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.