மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டக்காரர்கள் பேரூந்துகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூர் பகுதியில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று 12 மணி நேர முழுக் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி இன்று போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில், முழு அடைப்பையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல், புகையிரத மறியல் என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்து சாரதிகள் தலைக்கவசத்தை அணிந்து பேரூந்துகளை இயக்கியுள்ளனர்.
ஹவுரா – பர்தமான் பிரதான வழித்தடத்தில் புகையிரதத்தை மறித்து போராட்டம் நடத்தியதனால் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி மாநில வளர்ச்சியை முடக்குவதாக பாரதிய ஜனதா கட்சி மீது மாநில கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குற்றஞ்சாட்டினார்.
மேலும், முழுக் கடையடைப்புக்கு யாரையாவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது பொலிஸ் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அவர், தங்கள் கட்சிக் காரர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், போராட்டத்தை முறியடிக்க அரசு பலவந்தமாக முயற்சிப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
முழுக் கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.