உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை, பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றிச் செல்வதுடன், நீ இந்துவாக இருந்துகொண்டு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் என கேட்டு தாக்குகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மீரட் மருத்துவக் கல்லூரி அருகே அப்பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்ததை கண்ட, விஎச்பி அமைப்பினர் இருவரையும் தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் அங்கு இருவரையும் தனித்தனி வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப்பொருளானது. உத்தரப் பிரதேச போலீஸாருக்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.