கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமை நேரத்தில் பேஸ்புக் பார்த்த அதிகாரிகளினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் செயற்படும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், சேவையை பெற்றுக் கொள்ள சென்ற நபர் ஒருவர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பிரிவில் கடமையில் இருந்த அதிகாரி, கடமையை நிறைவேற்றாமல் பேஸ்புக் பார்வையிட்டுள்ளார். இதனால் சேவை பெற்றுக் கொள்ள சென்றவருக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த குறித்த நபர் அந்த சம்பவத்தை காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தியமை குறித்து, பாதிக்கப்பட்ட நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அதிகாரி குறித்த நபரை கடுமையாக திட்டியதுடன், பேஸ்புக் பார்ப்பது தன்னுடைய தனிப்பட்ட விடயம் எனவும் கூறியுள்ளார்.
அரச நிறுவனங்களில் பணியாற்றுவோர் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும், கடமை நேரத்தை வீணடிப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது