மோடி கொண்டுவந்த மருத்துவத் திட்டத்துக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என மருத்துவரும் தமிழிசையின் கணவருமான சௌந்தரராஜன் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
பெரும்பாலும் அரசியல் கட்சியைக் குறித்தும், தலைவர்கள் குறித்தும் தன் தரப்பை வெளிப்படுத்த விரும்பாத சௌந்தரராஜன் இப்போது கருத்து தெரிவித்திருப்பதை முன்வைத்தும் தமிழிசை குறித்தும் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
‘உயிர்’ என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அந்த உயிரைப் பணம் இருப்பவர்கள் மட்டும் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளும் ஒருபோக்கு இந்தியாவில்தான் இருக்கிறது.
நானும், என் மனைவி தமிழிசையும் ஒருமுறை கனடாவுக்குச் சென்றோம். அங்குள்ள உயர்தர மருத்துவமனைகளில் சாதாரண மக்கள் உட்பட அனைவரும் இலவச சிகிச்சை பெறுகிறார்கள். நம் நாட்டில் அப்படியெல்லாம் ஒரு திட்டம் வராதா என ஏங்கி இருக்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இல்லையென்றாலும், உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை மோடி கொண்டு வந்திருக்கிறார்.
ஒரு குடும்பம் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடாகப் பெறலாம் என்பது மகத்தான திட்டமில்லையா… இப்படியொரு மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தியதற்குத்தான் மோடிக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டுமெனச் சொன்னேன்.
“நீங்கள் ஒரு மருத்துவர் என்பதால் உங்களிடம் இதைக் கேட்கிறேன். நீட் தேர்வு குறித்து உங்கள் பார்வை என்ன?”
“உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நீட் தேர்வினால் விளிம்பு நிலை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவர் ஆவதில் பாதிப்பு இருக்கிறது.
இந்தத் தேர்வு முறையை அரசாங்கம் இவ்வளவு அவசரகதியில் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை.
ஆனால், மாணவர்கள் இதைக் கடந்து வர வேண்டும். ஒரு கிராமத்தில் தமிழ் மீடியம் பள்ளியில் படித்துதான் நான் மருத்துவர் ஆனேன்.
பாடம் முழுக்க ஆங்கிலத்தில் பார்த்தபோது அப்படியே வீட்டுக்கு ஓடிவிடலாமா என்றிருந்தது.
ஆனால், மன உறுதியுடன் படித்தேன். நம்மால் முடியும் என்று நம்பினேன். எம்பிபிஎஸ் முடித்தேன்.
எம்.டி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றேன். கடந்த முப்பது வருடங்களாகச் சிறுநீரகச் சிறப்பு மருத்துவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆக, மொழியை ஒரு தடையாக மாணவர்கள் கருத வேண்டாம். அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் முறையான காலஅவகாசத்துடன் நீட் தேர்வை இன்னும் நெறிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் பரபரப்பான அரசியல்வாதிகளுள் உங்கள் மனைவி தமிழிசையும் ஒருவர். வீட்டில் எப்படி இதே அரசியல் ஆவேசத்துடன்தான் இருப்பாரா?”
“அரசியல் குறித்து வீட்டில் அதிகம் பேசமாட்டார். எங்களுக்குள் சில கருத்துவேறுபாடுகள் வரும். அப்போது மட்டும் நிறைய பேசுவோம். சமீபமாக விமானநிலையத்தில் நடந்தது ஒரு மென்டல் ட்ராமாதான். அவருக்குப் பொய் பேச வராது. மனதில் உள்ளதைப் பேசிவிடுவார். ஆனால், தமிழிசை எந்தத் தடையையும், எதிர்ப்பையும் கடந்துவரக் கூடியவர். தன்னடக்கத்துடன் சொல்கிறேன் தமிழிசை ஒரு அயர்ன் லேடி.”
இன்றும் பெண்கள் அரசியலுக்கு வர இயலாத குடும்ப அமைப்புகள் குறித்து..?
நம் வீட்டில் கரன்ட் இல்லையென்றால் உடனே பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்கிறோம். அங்கும் கரன்ட் இல்லையென்றால் நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.
கரன்ட் நம் தெருவிலேயே இல்லையென்றால் அந்த சந்தோஷம் இரட்டிப்பாகிறது. நம் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம். அப்படியிராது, நம் நாடும் நன்றாக இருக்க வேண்டுமென எண்ணுதல் அவசியம்.
அந்த எண்ணம் நம் வீட்டுப் பெண்களுக்கும் வரும்போது அவர் களத்தில் இறங்கிச் செயல்பட விரும்பினால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அவர்களும், தம் குடும்பவாழ்க்கை பாதிக்காத அளவுக்குப் பொதுவாழ்க்கையில் செயல்பட வேண்டும்.
தமிழிசை ஒரு மருத்துவரும்கூட, அவருடைய அரசியல் பிரவேசத்தினால் மருத்துவ உலகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?”
மருத்துவத்தில் இருந்திருந்தால் சிலநூறு பேரின் நோயைத்தான் அவர் குணப்படுத்தி இருப்பார். இப்போது ஒட்டுமொத்த சமுதாயப் பிணியையே போக்கும் பணியில் அல்லவா இருக்கிறார்.