தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும்.
அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம்.
கதைக்களம்
பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.
இவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.
ஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.
ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.
அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.
வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.
சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.
விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.
இவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.
ஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.
படத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.
நடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவும் எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கு தருணத்தில் தடுமாறும் கிளைமேக்ஸ்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
மணிரத்னம் படத்திற்கே உண்டாக கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).
ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.
மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்