மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. ஊபா சட்டத்தை திருமுருகன் காந்தி மீது அரசு தொடுத்தது தேவையற்றது என நீதிமன்றமே தெரிவித்த நிலையிலும், பிற வழக்குகளை சுட்டிக்காட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக பகீர் செய்திகள் வெளிவந்துள்ளன.
45 நாட்களாக திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில் கூட சிறையில் இருக்கும் மற்றவர்களை அவர் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.
அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனி சிறை அறையானது கடந்த இரண்டு ஆண்டு காலமாக எவருமே தங்காத பழைய கட்டிடமாகும். அந்த அறையில் காற்றோட்டம் கூட சரியாக இல்லாததால் அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினையும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருமுருகன் காந்தியை தீவிரவாதியை அணுகுவதனைப்போலவே காவல்துறை அணுகுவதாக அவரது இயக்கத்தினை சேர்ந்தவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அவற்றை இங்கே குறிப்பிடுகையில்,
”சரியான உணவு வழங்கப்படுவதில்லை. உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் சுடுநீர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அழுக்கான ஓர் போர்வையை மட்டுமே அவருக்கு அளித்துள்ளனர். அதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது.
மயங்கி வீழ்ந்த திரு சரியான உணவு வழங்கப்படாத காரணத்தினால் சிறைக்குள் மயங்கி வீழ்ந்த திருமுருகன் காந்தியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கம் தெரிவிக்கப்படவில்லை. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் காவல்துறை முன் வர மறுக்கிறது.
அதேபோல் திருமுருகன் காந்தி சிறைவைக்கப்பட்டுள்ள அறைக்குள் சில தினங்களுக்கு முன்னதாக இரவு வேளையில் பாம்பு ஒன்று வந்ததாகவும் அந்த வேளையில் அவர் உறங்காமல் விழித்திருந்ததன் காரணமாக அதனை விரட்டையதாகவும் தெரிகிறது. இதே போன்று அந்த அறைக்குள் அவ்வப்போது விஷப்பூச்சிகள் ஊர்ந்துவருவதாகவும் அதன் காரணமாக திருமுருகனுக்கு ஏதேனும் நேருமோவென அச்சம் தெரிவிக்கின்றனர் அவரது இயக்கத்தினர்.
மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தால் – வீரியமாக போராடினால் அரசுகள் இப்படித்தான் ஓர் இயக்க தலைவரை ஒடுக்குமா என்ற கேள்வி நம்முள் எழாமல் இல்லை. இந்த நேரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அரசு – சிறை நிர்வாகத்தின் இத்தகைய அராஜகப்போக்கினை கண்டித்து திருமுருகன் காந்திக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்யவேண்டுமென்பதுவே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.”