நாகை மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
3 இலட்சம் மதிப்புள்ள வலைகள் உள்ளிட்ட ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக்கொண்டதாகவும் அரிவாள் வெட்டுக்கு உட்பட்ட மீனவர்கள் நாகை அரசு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கந்தவேல், முருகானந்தம் உள்ளிட்ட 3 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது, அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு தலை, கை, கால்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் அந்த மீனவர் படகிலேயே இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதன் பின்னர் கடற்கொள்ளையர்கள் மற்றும் மீனவர்களை தாக்கி விட்டு படகில் இருந்த 3 இலட்ச ரூபாய் மதிப்புள்ள வலை, மீன், புளு உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரை திரும்பியதுடன், படுகாயமடைந்த மீனவர்கள் நாகை அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதேபோன்று இலங்கை கடற்கொள்ளையர்களால் நாகை மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்துவரும் நிலையில் இன்று மீண்டும் செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.