ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தருமபுரியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
டூர்
இந்த நிலையில், ஏற்காடுக்கு டூர் போக முடிவு செய்த காதலர்களுக்குள் ஓட்டலில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த இளம் பெண், அண்ணா பூங்கா அருகே ரோட்டில் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார், கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர். வாசுதேவனிடம் ஏற்பட்ட கோபம் காரணமாக, நடந்தவற்றை, அவர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார்.
காதலன் தேடல்
இந்த நிலையில், காதலி கோபித்துக் கொண்டு எங்கு போனாலோ என்று பதறிய வாசுதேவன், அவரைத் தேடிச் சென்றார். அப்போது, டிரைவர்களிடம் காதலி பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர்களிடம் சென்று, அந்த பெண்ணிடம் என்ன பேச்சு என்று கேட்டார். அப்போது, அந்த இரு டிரைவர்களும் வாசுதேவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வாசுதேவன் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
திருட்டு
மேலும், வாசுதேவன் அணிந்திருந்த வாட்ச், செயின், மோதிரம், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். அந்த பெண்ணையும் ஆட்டோவில் கடத்தி சென்றனர். பாதி வழியில், கார் டிரைவர் ஆரோக்கியதாஸ் இறங்கிக் கொண்டார். விஜயகுமார், அந்த பெண்ணுடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.
புகார்
படுகாயமடைந்த வாசுதேவன், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார். காதலி கடத்தி செல்லப்பட்டதாக புகார் செய்தார்.
விசாரணை
வாசுதேவனின் புகாரை அடுத்து, பொலிசார் உடனடி விசாரணையில் இறங்கினார். ஏற்காடு முழுவதும் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களை சல்லடைபோட்டு தேடி கண்டுபிடித்தனர். இளம் பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர் விஜயகுமார், தனக்கு தெரிந்து ஓட்டல் ரூம் ஒன்றில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.