இறுதிக்கட்ட போரின் போது இராணுவத் தளபதியாக இருந்த நானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
“போர் முடிவடைய இருந்த கடைசி இரண்டு கிழமைகளில் நான் தான் நாட்டின் பதில் பாதுகாப்பு அமைச்சர். ஜனாதிபதி , இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நாட்டில் இருக்கவில்லை. புலிகள் கொழும்பைத் தாக்கி அழிப்பார்கள் என்று கருதி முக்கியமானவர்கள் நாட்டில் இருக்கவில்லை. பாதுகாப்பு கருதி நானும் ஆங்காங்கு பாதுகாப்பாக இருந்தேன். எவரையும் விட எனக்கு அந்த இறுதி நாட்கள் பற்றி நன்கு தெரியும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் குறிப்பிட்டடிருந்தார்.
அவரின் இக் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களனியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
“போரின் இறுதிக் கட்டத்தில் படையினரை பலப்படுத்தல் உட்பட மேலும் பல நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெறும். வெறுமனே இருந்து போர் செய்யமுடியாது.
போர் முடிவடையும் நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த மே – 16ஆம் திகதி நாடு திரும்பினார். எனக்கும் சீனா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இறுதிக்கட்டப் போரின் இரண்டு வாரங்கள் என்பது முக்கிய கட்டம் அல்ல. சாதாரண சிப்பாய்களால் கூட இலகுவாக அதை முடிக்கக் கூடிய களநிலைவரம் இருந்தது. இரண்டு வாரங்கள் பதில் அதிகாரியாக இருப்பவருக்கு என்ன செய்யமுடியும்?
போர் குறித்து முழுமையாக அறியமுடியுமா என்ன? எம்மிடையே ஓடி ஒளியும் இராணுவம் இருக்கவில்லை. அப்போதைய ஜனாபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர்கூட பினவாங்கவில்லை”என்றார்.